கோவையில் விடுதலையான பாஜக நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு; வழக்குப் பதிவு செய்து கவுரவித்த காவல்துறை!!

கோவை மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 11 கட்சி நிர்வாகிகளுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக 6 பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

First Published Oct 8, 2022, 10:16 AM IST | Last Updated Oct 8, 2022, 11:35 AM IST

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 6 பா.ஜ.க நிர்வாகிகள் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

திமுக எம்பி ஆர். ராசாவை கண்டித்து பொதுக் கூட்டத்தில் மிரட்டும் தொனியில் பேசியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தொண்டர்களும் இந்து அமைப்பினரும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்து சமய அறநிலையத்துறையை சைவ, வைணவ சமய நலத்துறை என பிரிக்க வேண்டும் - திருமா அறிவுரை

இது தொடர்பாக 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று இவர்கள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக கோவை மத்திய சிறை வாசலில் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் 100க்கும் மேற்ப்பட்ட தொண்டர்கள் அங்கு கூடினர். மேள தாளங்கள் இசைக்கப்பட்டன. சிறை வாசலில் மேள தாளங்கள் இசைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் காவல்துறையினருக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மத்திய சிறை வாசலில் லேசான பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், விடுதலை ஆனவர்கள் பாஜக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக காரில் அழைத்து வரப்பட்டனர். இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது .

இதனையடுத்து கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 6 பா.ஜ.க நிர்வாகிகள் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

Video Top Stories