தடாகம் பகுதியில் குட்டியுடன் புகுந்த யானை கூட்டம் பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு
கோவையில் தடாகம் பகுதியில் குட்டியுடன் புகுந்த காட்டு யானை கூட்டம் திடீரென பொதுமக்களை விரட்டத் தொடங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தடாகம் பள்ளத் தாக்கு பகுதியில் அமைந்துள்ளது 24 வீரபாண்டி கிராமம். அங்கு உள்ள செங்கல் சூளையில் இன்று குட்டிகளுடன் காட்டு யானை கூட்டம் ஒன்று புகுந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
யானையை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு யானையை விரட்ட சத்தம் எழுப்பியதால் யானை செய்வதறியாது அங்குமிங்கமாக ஓடத் தொடங்கியது. மேலும் சத்தம் எழுதிய இளைஞர்களை துரத்தியது. இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் பொதுமக்கள் மற்றும் யானைக்கு ஏதேனும் சேதம் ஏற்படும் முன்பு அதனை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.