Viral Picture : அரசு பேருந்து படிக்கட்டில் ஓட்டை! அறிவிப்பு பலகையை கொண்டு மறைத்த நிர்வாகம்!
அரசுப் பேருந்தில் படிக்கட்டு ஓட்டையான நிலையில் வழித்தட அறிவிப்பு பலகையை வைத்து மறைத்த போக்குவரத்து நிர்வாகம். இது தொடர்பான ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாநகர் பகுதியில் இருந்து மருதமலைக்கு ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மருதமலைக்கு செல்லும் ஒரு அரசு பேருந்தில் படிக்கட்டு ஒன்று ஓட்டையாகி இருந்துள்ளது. அந்த ஓட்டையை பேருந்தின் வழித்தட பெயர் பலகையை கொண்டு போக்குவரத்து நிர்வாகத்தினர் மறைத்துள்ளனர். இதனை அப்பேருந்தில் சென்ற பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இப்புகைப்படங்களை பார்வையிடும் வலைதளவாசிகள் போக்குவரத்து கழகத்தின் இச்செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கோவையில் மிகவும் பிரசித்தி மருதமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பேருந்துகளையே பயன்படுத்தி வரும் நிலையில் இது போன்று அலட்சியமாக உறுதி இல்லாத வழித்தட பலகையை கொண்டு படிக்கட்டின் ஓட்டையை மறைப்பது பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பேருந்துகள் பழுதுகளுடன் இயங்கி வருவதால் போக்குவரத்து கழகம் பழுதுகளை சரிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.