கடும் வெள்ளப்பெருக்கு; கோவை குற்றாலம் தற்காலிக மூடல் - வனத்துறை அறிவிப்பு
கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கின் காரணமாக தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் அவ்வப் போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திடீரென நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியவுடன் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.
இப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாகவும், கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும், சிறுவாணி நீர் பகுதி, நொய்யல் ஆறு, பகுதியில் உள்ள குளம், குட்டைகள் ஆகியவை வேகமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.