புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு மாணவர்கள் பங்காற்ற வேண்டும்! பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பேச்சு!
கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 35-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெற்றது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 35-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 3877 மாணவர்களுக்கு பட்டங்களையும், 71 மாணவர்களுக்கு பதக்கங்களையும் தமிழக ஆளுநர் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றிய தமிழக ஆளுநர் தெரிவித்ததாவது, இன்றைய பட்டமளிப்பு விழாவில் அதிக அளவில் பெண்கள் பட்டம் பெற்றதும், பதக்கங்கள் பெற்றதும் பெருமைக்குரிய விஷயமாகும் என்றார். நமது நாட்டின் வளர்ச்சியின் முக்கியமான காலத்தில் நாம் இருக்கிறோம் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். இதை எண்ணி மாணவர்கள் இளைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும். இந்த புதிய இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்றார். உறுதியான, திறன்மிக்க, அனைவரையும் உள்ளடக்கிய புதிய இந்தியா தற்போது உருவாகி வருகிறது. சர்வதேச அளவில் உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கி இருக்கின்றன. உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. கோவிட் பாதிப்பிற்கு பிறகு உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சக்தியாக சர்வதேச நாடுகள் இந்தியாவை பார்ப்பதாக தெரிவித்தார்.