கோவையில் பள்ளி நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவர்கள், பொதுமக்கள்
கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுகாக, பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு பேருந்து நேற்று முதல் இயக்கப்பட்ட நிலையில் இதனை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ளது வீரபாண்டி பேரூராட்சி. இங்குள்ள முத்தமிழ்நகரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உடனடியாக காலை, மாலையில் பள்ளி நேரத்தில் கூடுதலாக பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று முதல் கூடுதல் அரசு பேருந்து இயக்கப்பட்டது இந்நிலையில், பள்ளி வளாகத்தில் பேருந்துக்கு முன்பாக பட்டாசு வெடித்தும், பூசை செய்தும் பேருந்தை பேரூராட்சி நிர்வாகத்தினரும், பள்ளி மாணவ, மாணவியரும் வரவேற்றனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் பேரூராட்சி தலைவர் பத்மாவதி ஆகியோர் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் சிரமமின்றி வந்து செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.