Watch : கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் குழாயில் உடைப்பு! வீணாகும் தண்ணீர்! - கேட்பார் யாரோ?
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீரால் பொதுமக்கள் அவதிக்கும் கவலையும் அடைந்துள்ளனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி என்பது கோவை மாநகரின் முக்கியமான பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு உட்பட அரசு அலுவலர்களின் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சாலை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் விரிவாக்கப்பட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டன. மேலும் பல்வேறு மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தற்போது பெரும்பாலான பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் அங்கு நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மேலும் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் அப்பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் மரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் பாய்த்துவதற்காக போடப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.
தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. அதிகப்படியான தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதனை சரி செய்யும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே போன்று இப்பகுதியில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதிகப்படியான நீர் வெளியேறியது. அதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்த நிலையில் மீண்டும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.