Asianet News TamilAsianet News Tamil

மறைந்த நடிகர் மயில்சாமியின் குரலில் பேசி.. அஞ்சலி செலுத்திய மிமிக்ரி கலைஞர்கள் - நெகிழ்ச்சி வீடியோ!

மறைந்த நடிகரும், மிமிக்ரி கலைஞருமான மயில்சாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது குரலில் பேசி தமிழ்நாடு பலகுரல் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். நகைச்சுவை,குணசித்திரம் என தமிழ் திரையுலகில் தனி இடத்தை பிடித்திருந்த நடிகர்   மயில்சாமி மேடைகளில் மிமிக்ரி செய்வதிலும் தனி திறமை கொண்டவர். இவரது  மறைவு திரையுலகம் மட்டுமின்றி பல குரல் கலைஞர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் தமிழ்நாடு பலகுரல் கலைஞர்கள் சார்பில்  அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் மறைந்த மயில்சாமியின் உருவ படத்திற்கு பல குரல் கலைஞர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். திரைப்படம் மட்டுமின்றி மேடைகளில் மிமிக்ரி செய்வதிலும் தனி ரசிகர்களை கொண்ட அவருக்கு அவரது குரலிலேயே பேசி பல குரல் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். 

குறிப்பாக பலகுரல் கலைஞர்கள் மறைந்த மயில்சாமி அடிக்கடி மிமிக்ரி செய்யும்  எம்.ஜி.ஆர்.மற்றும் நம்பியார் ஆகியோரின் குரல்களிலும் பேசி அஞ்சலி செலுத்தினர். தங்களது அபிமான கலைஞரின் குரலில் பேசி பலகுரல் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தியது அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதில் மிமிக்ரி கலைஞர்கள் கோவை குணா, சென்னை கிரி, கோவை குமார், கோவை கணேஷ், ஈரோடு அன்பு, ஈரோடு சீனி, ஈரோடு ரவிச்சந்திரன், கோவை குரு உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

Video Top Stories