கோவையில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கோவை மாவட்டம் பேரூர் ஆதின வளாகத்தில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கோவையை சேர்ந்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் கொண்டாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதன்படி கோவை பேரூர் ஆதின வளாகத்தில் பேரூராதினம் மருதாசல அடிகளாருடன் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத போதகர்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் இஸ்லாமிய மதரசாவில் பயிலும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய ஒற்றுமையை பறை சாற்றும் விதமாக மதங்களை கடந்து அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.