கோவையில் வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களை தேடிய காட்டு யானைகள்; அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்
கோவையில் இரண்டு காட்டு யானைகள் உணவு தேடி திடீரென வீட்டிற்குள் சென்றதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானைகளின் வலசை காலம் துவங்கி உள்ளதால் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. மேலும் மருதமலை வனப்பகுதியிலும் யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானைகள் அருகில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை மற்றும் அதன் குட்டி ஐஓபி காலனி மாலதி நகர் பகுதிக்குள் புகுந்தது. பின்னர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்த யானைகள் ஒரு வீட்டிற்குள் நுழைய முயன்றது. அதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். உள்ளே வந்த யானைகள் உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என பார்த்துவிட்டு திரும்பி சென்றது.