விவசாயிகளின் கூலிக்கு கூட தேறவில்லை; தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

தக்காளி ஒரு கிலோ ரூ.3க்கு விற்பனையாவதால் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு கூட வருமானம் இல்லை என்று கூறி தக்காளியை பெரும்பாலான விசாயிகள் சாலையில் கொட்டி அழித்து வருகின்றனர்.

First Published Mar 29, 2023, 8:20 PM IST | Last Updated Mar 29, 2023, 8:21 PM IST

உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு காய்கறிகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் சாகுபடியில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் விற்பனைக்காக தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.

அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் தக்காளி சாகுபடி பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி உற்பத்தி அதிகரிக்கும் காலங்களில் பெரும் விலை சரிவு ஏற்படுகிறது. 

விலை உயர்வு ஏற்படும்போது மாற்று விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தக்காளியின் விலை குறைந்துள்ளதால் சாலையோரங்களில் கொட்டி அதனை அழித்து வருகின்றனர். சந்தையில் மொத்த விற்பனையில் தற்போது சுமார் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.3  முதல் ரூ.5 வரை விற்பனையாகும் நிலையே உள்ளது. இதனால் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிலையில் கூட லாபம் கிடைப்பதில்லை எனக்கூறி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.