கோவையில் இரவு நேரத்தில் பூட்டிய வீடுகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தும் யானைகள் - உயிர் பயத்தில் மக்கள்
கோவை தடாகம் அருகே இரவு நேரத்தில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்த காட்டு யானைகள் பொருட்களை சேதப்படுத்திச் சென்ற நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் சமீப காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு தடாகம் தாளியூர் பகுதியில் அமைந்துள்ள வீடுகளின் அருகே சுற்றி வந்த காட்டு யானைகள் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து வீட்டினுள் இருந்த பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கணுவாய் முதல் காளையனூர், மாங்கரை, நஞ்சுண்டாபுரம் வரப்பாளையம், தாளியூர், நரசிம்மநாயக்கன் பாளையம் என தடாகம் பள்ளத் தாக்கு முழுவதற்கும் ஒரேயொரு வாகனத்தில் வனத்துறை ரோந்துப் பணி நடக்கிறது. யானைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வனத்துறையினர் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.