Asianet News TamilAsianet News Tamil

கும்மி, ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் கலை கட்டிய பொங்கல் விழா; கோவை தனியார் கல்லூரியில் கோலாகலம்

கோவை சூலூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில பாரம்பரிய உடையணிந்து கரகாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம் என பாரம்பரிய கலைகளுடன் மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். 

தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமரிசையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சூலூர் பகுதியில் உள்ள கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் வேஷ்டி, சட்டை என பாரம்பரிய உடைகளை அணிந்து  கலந்து கொண்டனர். 

புடவை அணிந்து வந்த மாணவியர் நடனமாடி, மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கொண்டாடினர். மாணவிகள் வண்ண கோல‌மிட்டு, கும்மியாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் கலந்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக உறியடித்தல், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இதனை கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், கல்லூரி நிறுவனருமான பொங்கலூர் பழனிச்சாமி, கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Video Top Stories