Watch : பேனர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதம்! - அன்னூரில் பரபரப்பு!
அன்னூரில் சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அகற்றுமாறு கூறியதால் போலீசாருடன் பாஜக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் அன்னூரில் இருந்து நடைபயணமாக விவசாயிகள் கோவைக்கு நடந்தே வந்தனர். இது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பாஜக அறிவித்து இருந்தது.
இதில் பங்கேற்பதற்காக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை அன்னூர் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அவரை வரவேற்கும் விதமாக சத்திசாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் பேனர்கள் வைத்து உள்ளனர். மேலும் சாலை நடு நெகிலும் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு போலீசார் பாஜகவினருக்கு அறிவுறுத்தினர். பேனர்கள், கொடி கம்பங்களை அகற்ற முடியாது என்றும், இதற்கு மறுப்பு தெரிவித்து, அன்னூர் பயனீர் மாளிகை முன்பு போலீசாருடன் பாஜக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.