Heat Stroke First Aid : ஹீட் ஸ்ட்ரோக் வந்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்? மருத்துவர் சொன்ன டிப்ஸ்..
ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் உடனடியாக என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று பிரபல மருத்துவர் பேசி உள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடும் வெயில் காரணமாக பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். அதில் ஒன்று தான் ஹீட் ஸ்ட்ரோக். மிக அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் போது இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.
பொதுவாக மனிதர்களின் உடல்நிலை 98.6 டிகிர் ஃபாரன்ஹீட், 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். வெயில் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று அதிக நேரம் வெயிலில் இருப்பதால், உடலின் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 104 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. கடுமையான வெயில் காலத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக சில நேரங்களில் வியர்வை வராது. உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும் அமைப்பு செயல்படாமல் போனால் உடல் வெப்பம் அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும். இதனால் சிலர் மயக்கம் போட்டு கீழே விழுவார்கள். சில நேரம் ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
சரி, ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் உடனடியாக என்ன முதலுதவி செய்ய வேண்டும். பிரபல மருத்துவர் ராம் மோகன் இதுகுறித்து பேசி உள்ளார். ஒருவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் உடனடியாக அவரின் உடல் வெப்பநிலையை குளிர்விக்க வேண்டும் என்பதே சிறந்த வழி என்று கூறியுள்ளார். குளிர்ந்த ஐஸ் கட்டி நீரில் குளிக்க வைப்பது, உடலில் அதிக சூடு இருக்கும் இடங்களில் ஐஸ்கட்டி வைப்பது போன்ற முதலதவி செய்வதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.