பாலைவனத்தில் உயிர் பிழைக்க ஒரு போராட்டம்! மனதை ரணமாக்கும் 'தி கோட் லைஃப்' படத்தின் ட்ரைலர் வெளியானது!

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில், சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகி இருக்கும் 'தி கோட் லைஃப்’ ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரைலர் வெளியானது.
 

First Published Mar 9, 2024, 4:29 PM IST | Last Updated Mar 9, 2024, 4:30 PM IST

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள திரைப்படம் 'தி கோட் லைஃப்’. மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் 28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்திய சினிமாவின் மூன்று உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தின் வித்தியாசமான போஸ்டர்களை வெளியிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.  

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த  இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது. 

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில் விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

Video Top Stories