சிறுபான்மையினரால் இந்துக்களுக்கு ஆபத்தா.? பாஜகவை வெளுத்து வாங்கிய திருமாவளவன்

சிறுபான்மையினரால் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்து என்று சொல்லுவது அப்பட்டமான அயோக்கியத்தனமான வெறுப்பு அரசியல் என்று கூறியுள்ளார் தொல். திருமாவளவன்.

First Published Aug 27, 2023, 4:56 PM IST | Last Updated Aug 27, 2023, 4:56 PM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய போது, “ பிஜேபி இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான இயக்கம் என இந்துக்கள் நம்பும் அளவிற்கு, இந்துக்கள் ஒன்றிணைந்து பாஜகவை ஆதரிக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். இந்துக்களின் மனதில்  வெறுப்பு அரசியலை விதைத்து, வன்மத்தை தூண்டி அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயலில் பாஜக ஈடுபடுகிறது. இந்துக்களிடைடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் அவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பைபிள் உண்டு, ஜெபம் உண்டு என்று இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் பக்கம் தலை வைப்பதே இல்லை. இஸ்லாமியர்களைப் போல கிறிஸ்தவர்களுக்கு தேசிய அளவிலும் தமிழக அளவில் அரசியல் இயக்கம் இல்லாத பொழுது எப்படி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவார்கள்? அரசியல் பேசுவார்கள்? சிறுபான்மையினரால் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்து என்று சொல்லுவது அப்பட்டமான அயோக்கியத்தனமான வெறுப்பு அரசியல்.

இஸ்லாமியர்கள் அடிமாடுகளை இறைச்சியாக பயன்படுத்துவதை, பசு மாட்டை கொல்வதைப் போல தவறாக சித்தரிக்கிறார்கள். லவ் ஜிகாத் என்ற இஸ்லாமியர்கள் காதல் என்ற பெயரில் பெண்களை  பயன்படுத்துவதாகவும், ஐஎஸ் தீவிரவாத இயக்கங்களுக்கு அனுப்புவதாகவும் அவதூறு கூறுகின்றனர். மதமாற்றம், புனித பசு, லவ்ஜிகாத் உள்ளிட்ட மூன்று யுக்திகளை பயன்படுத்தி, சித்தரித்து பேசி, இந்துக்களிடம் வெறுப்பு அரசியலை விதைக்க திட்டமிடுகின்றனர்.

வெறுப்பை விதைப்பது, இந்து என்கிற உணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டும் என்பதற்காகவே. பெரும்பான்மை  இந்துக்களை ஒன்றிணைக்க கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் பலிகிடா ஆக்குகின்றனர். இது அனைத்தும் வாக்கு வங்கிக்கான யுக்தி. அரசியல் நீதி, சமூக நீதி,பொருளாதார நீதி இதனை இறையாண்மையுள்ள ஜனநாயக அரசு உறுதிப்படுத்தும். சுதந்திரம், சமூகம், சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டுமே தவிர ஒரே நாடு, ஒரே கொள்கை என சொல்லக்கூடாது.

இந்து மதத்தை இந்த நாட்டின் அரசு மதமாக அறிவிக்க வேண்டும் என நினைப்பவர்கள், அனைவரும் ஒன்றுதான், பார்ப்பனர்களும், அருந்ததியினர்களும்  ஒன்று தான் என  பிரதமர் மோடி அறிவிக்கட்டும், சகோதரத்துவத்தை கொண்டுவரட்டும் பிறகு இதை பேசட்டும்” என்று கூறினார்.

இந்த தொகையை விட அதிகமாக பணம் வைத்திருந்தால் அவ்ளோதான்.. ஐடி ரெய்டு உறுதி - எவ்ளோ தெரியுமா.?