Asianet News TamilAsianet News Tamil

Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!

Coimbatore : கோவை பாலக்காடு நெடுஞ்சாலை கரும்புக்கடை சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

First Published May 16, 2024, 10:30 PM IST | Last Updated May 16, 2024, 10:30 PM IST

இதுகுறித்து கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் கரும்புக்கடை போலீசார் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஐந்து இளைஞர்களை பிடித்து விசாரித்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபட்டோமின், மருந்து குப்பிகள் ஆகியவற்றை வைத்திருந்தது தெரிய வந்தது. 

அதனைத் தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரும் கைது செய்யபட்டு, அவர்களிடம் இருந்து 3 கிராம் மெத்தபடோமெயின் மற்றும் 116 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து பேரும் (பிரவின் செட்டி, சாகுல் அமீது, முருகன், ரியாஸ்கான், அக்பர் அலி)  சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், கோவை மாநகரில் போதை பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கு தனி படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். தற்பொழுது இந்த வழக்கில் கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதனை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் ஒரு சில மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருவதாகவும் மெடிக்கல் சிரஞ்சுகளை வாங்கி ஊசியாக பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த மாத்திரைகளை கர்நாடகாவில் இருந்து வாங்கி உள்ளதாக தெரிவித்த அவர் அங்கு ஊப்பிலி என்ற இடத்தில் வங்கி இருப்பதாகவும் அங்கு பிரவீன் செட்டி என்பவர் மருந்து கடை வைத்து நடத்தி வரும் நிலையில் கோவையில் அவர் இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளதாகவுன் தெரிவித்தார். 

14 ரூபாய் மதிப்புள்ள இந்த மாத்திரைகளை ஒரு மாத்திரையை 60 - 300 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளதாகவும், கோவையில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேல் இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தார். தற்பொழுது இவர்கள் பிடிபட்டதன் மூலம் சப்ளை பாயிண்ட் முழுமையாக நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் கோவை மாநகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாகவே இவற்றையும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். கோவையில் கஞ்சா உள்ளிட்டவற்றின் விற்பனை குறைந்துள்ளதால் இது போன்ற மாத்திரைகளை நோக்கி செல்வதாகவும் கோவையில் இது போன்ற மாத்திரைகள் தடுக்கப்பட்டதை தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு சென்று வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார். 

நேற்றைய தினம் காந்திபுரம் பகுதியில் தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தது குறித்தான கேள்விக்கு குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிந்தே குடிபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கக்கூடும் எனவும் எச்சரித்தார். மேலும் இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ஆலோசித்து அறிவுரைகளை வழங்கி உள்ளதாகவும் கூறினார். 

SIHS காலணியில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தான கேள்விக்கு அங்கு ரோந்து பணிகளை அதிகப்படுத்தி உள்ளதாக பதிலளித்தார்.

Video Top Stories