Watch : விருதுநகரில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியில் கைத்தறி ரகங்கள்; விற்பனை துவக்கம்!!
கோ ஆப்டெக்ஸின் தீபாவளி 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி துவக்கி வைத்தார்.
கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையை விருதுநகர் கடைத்தெருவில் அமைந்துள்ளவிருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இன்று காலை குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நடப்பாண்டில் ரூபாய் 39.00 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ், என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்
இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாகும். கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தற்போது உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு உள்ளது. காஞ்சிபுரம், சேலம் திருப்புவனம் பட்டு சேலைகள் மற்றும் கோவை மென்பட்டு சேலைகள் 30% தள்ளுபடி விலையில் விற்பனைக்கு தயாராக உள்ளது. மேலும் ஆடவர்களுக்கான நவீன ஆடைகளும் உள்ளன.
விருதுநகர் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை 23.95 லட்சங்கள் ஆகும். நடப்பு ஆண்டு 2022-23-ல் விற்பனை குறியீடாக 39.00 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.com என்ற இணையதளத்தின் மூலமும் வாங்கலாம்.
இந்நிகழ்ச்சியில் முதுநிலை மண்டல மேலாளர் கே. சங்கர், மேலாளர் (பொறுப்பு) ஆர். கீதா, கோஆப்டெக்ஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்