Watch : விருதுநகர் அருகே பெட்ரோல் பங்கிற்குள் புகுந்த மலைப் பாம்பு! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்!
வத்திராயிருப்பு பெட்ரோல் பங்கிற்குள் ஒரே வாரத்தில் 2 வது முறையாக மலைப்பாம்பு புகுந்ததால் பங்க் ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பாம்பை பிடித்துக்கொண்டு சென்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு டூ கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் கோபாலபுரம் விலக்கு பகுதியில் பாலாஜி என்பவர் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் திடீரென பெட்ரோல் பங்கிற்குள் மலைப்பாம்பு ஒன்று நுழைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பங்க் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.
உடனடியாக இது குறித்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைபாம்பை லாவகரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே பெட்ரோல் பங்கில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு பிடிபட்டு மலைப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.