திருச்சி அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சென்னையில் இருந்து போடி நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்னையில் இருந்து போடி நோக்கி புறப்பட்டது. பேருந்தை விழுப்புரம் மாவட்டம் சிறுவையை சேர்ந்த தங்கமணி என்பவர் ஓட்டி வந்தார். சுமார் 30 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மரவனூர் பகுதியில், சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது நெடுஞ்சாலையில் மேம்பால பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது பேருந்து ஏறி இறங்கியது. இதில், நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த பாலத்தின் சுவற்றில் மோதியது. இதில் பேருந்தின் முன் சக்கரங்கள் கழன்று, பேருந்து அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை. 10-க்கும் மேற்பட்ட பயணிகள் மட்டும் சிறு காயத்துடன் தப்பினர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரால் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு பின் அனைவரும் வீடு திரும்பினர். தனியார் பேருந்து விபத்து குறித்து மணப்பாறை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.