திருச்சியில் திடீரென அமைச்சர் நேருவின் காரை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் துறையூரில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேருவின் காரை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் ஒப்பந்ததாரர் செல்வராஜ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் பணிகள் செய்து அதற்கான பட்டியல் தொகை சுமார் ரூபாய் 7லட்சம் இதுவரை வழங்கவில்லை என்பதை கண்டித்து ஒன்றிய அலுவலக வளாகத்தில் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
உடனடியாக அவர்களை மீட்டு முதல் உதவிக்காக ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்த அதிமுகவினர் துறையூர் பாலக்கரை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டு வேலைகளை பார்வையிட்டு அங்கிருந்து துறையூர் வழியாக திருச்சி செல்வதற்காக அமைச்சர் கே.என்.நேரு வந்து கொண்டிருந்தார்.
துறையூர் பாலக்கரை பகுதியில் மறியலில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் அமைச்சரின் காரை முற்றுகையிட்டு தங்களது குற்றச்சாட்டுகளை கூறினார். இது பற்றி விசாரித்த அமைச்சர் நாளையே உரிய பட்டியல் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் அதிமுகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.