Watch : திருச்சியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 5000 கிலோ மாம்பழங்கள் அழிப்பு!
திருச்சியில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5270 கிலோ மாம்பழங்களும் 15வாழை தார் பறிமுதல் செய்யப்பட்டு அழித்து உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திருச்சி ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மொத்த விற்பனை செய்யும் மாம்பழம் குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஒரு குடோனில் மட்டும் 5270 கிலோ மாம்பழங்கள் எத்திலின் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வுக்காக சென்னை கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கெமிக்கல் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை, அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டன. மேலும் துறையூர் பகுதியில் எத்திலின் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 15 வாழை பழத்தார்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தெரிவித்தார்.