VIDEO | சுடுகாடு காணவில்லை! வடிவேலு பாணியில் நன்னிலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்!

நன்னிலத்தில் வடிவேலு பாணியில் சுடுகாட்டை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

First Published Jul 5, 2023, 1:07 PM IST | Last Updated Jul 5, 2023, 1:07 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட உபய வேதாந்தபுரம் ஊராட்சியில் உள்ள உபயவேதாந்தபுரம் பாலூர் ரைஸ் மில் தெரு பொன் கிளை கருண கொள்ளை ஆகிய 5 ஊர்களுக்கு உபய வேதாந்தபுரம் பகுதியில் புதைக்கின்ற வழக்கம் உடையவர்களுக்கான பொது சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டினை கடந்த 100 வருடங்களாக இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சுடுகாட்டிற்கு அருகில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவரது மகன் ஐயப்பன் தனது செங்கல் சூளைக்காக சுடுகாட்டை ஆக்கிரமித்து அந்த இடத்தில் 25 அடி ஆழத்திற்கு தோண்டி மண் எடுத்துள்ளதாகவும் இதனால் மழை பெய்தால் அந்த இடத்தில் குளம் போல் தண்ணீர் தேங்குவதாகவும்,மேலும் மண் சரிவு ஏற்பட்டு சுடுகாட்டிற்கு பாதை இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கடும் வெள்ளப்பெருக்கு; கோவை குற்றாலம் தற்காலிக மூடல் - வனத்துறை அறிவிப்பு

இந்நிலையில் நன்னிலம், சன்னாநல்லூர், பேரளம், பூந்தோட்டம், மேனாங்குடி உள்ளிட்ட ஊர்களின் முக்கிய பகுதிகளில் சுடுகாட்டை காணவில்லை என்று உபயோதாந்தபுரம் ஊராட்சி மற்றும் ஐந்து ஊர் கிராம பொதுமக்கள் என்று அச்சிடப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் தங்களது சுடுகாட்டை தனிநபரான ஐயப்பன் என்பவர் ஆக்கிரமித்து 25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளதை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மற்றும் இதற்கு துணை போகும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்தும் வரும் பத்தாம் தேதி பேரளம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.