ஐப்பசி பவுர்ணமி: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்.!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி விழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றனர்.

First Published Oct 28, 2023, 8:09 PM IST | Last Updated Oct 28, 2023, 8:09 PM IST

திருவண்ணாமலை, இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை நடைபெற்றது. பின்னர் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் செல்ல தொடங்கினர்.  

விடுமுறை மற்றும் அன்னாபிஷேகம் என்பதால் மாலைக்கு பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுவை போன்ற வெளிமாநில பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. கோயிலில் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். 

அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேகம் விழா இன்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதிக்கவில்லை. அதைத்தொடர்ந்து, மாலை 6 மணியளவில் வழக்கம்போல தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் இறைவனுடைய அற்புத ரூபத்தை தரிசிக்கின்ற நாள் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நடைபெறும் அன்னாபிஷேகமாகும். 

அன்று படைக்கப்படும் ஒவ்வொரு சாதத்திலும் ஒரு சிவத்தின் ரூபத்தை காணலாம். சிவத்தை வழிபட்ட பலன் அன்னாபிஷேகத்தின் போது கிடைக்கும்.அதை கண்ணார காணுகிறவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பதாலே சோற்றை கண்டால் சுகம் என்று சொல்லப்பட்டது. இதனால் இந்த அபிஷேகத்தை காணவும், அபிஷேகம் செய்யப்பட்ட சாதத்தை உண்ணவும் சிவன் கோயில்களில் கூட்டம் மிகுந்து காணப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் தயாரான 100 கிலோ சாதத்தை கொண்டு கருவறையில் இருக்கும் அண்ணாமலையாரின் திருமேனி முழுவதும் அலங்கரிக்கப்பட்டது.இதே போல் கல்யாண சுந்தரேஸ்வரரும் 25 கிலோ சாதத்தால் அலங்கரிக்கப்பட்டார். மேலும் அண்ணாமலையார் கருவறை வாயிற்படி வரையிலும் அப்பம், வடை, காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அன்னத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சிவலிங்கத்தை பிரம்ம தீர்த்த குளத்தில் சிவாச்சாரியார்கள் கரைத்த பிறகு அண்ணாமலையாருக்கு மகா தீபாராதனை நடைபெறும். பிறகு சாமிக்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னம் கலைக்கப்பட்டு அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா?

Video Top Stories