காதை கிழிக்கும் ஹாரன் சத்தம்; தனியார் பேருந்து ஓட்டுநர்களை லெப்ட், ரைட் வாங்கிய அதிகாரிகள்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்திய தனியார் பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

First Published Oct 9, 2023, 6:00 PM IST | Last Updated Oct 9, 2023, 6:00 PM IST

சேலத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பயன்படுத்தி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் குவிந்தன. இதையடுத்து, சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) தாமோதரன் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சதாசிவம், செந்தில், ராமரத்தினம், மாலதி ஆகியோர் இன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தினர். 

இதில் 50க்கும் மேற்பட்ட பேருந்துகளின் ஏர்ஹாரன் சோதனை செய்யப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 10க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தலா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து தாமோதரன் கூறுகையில்,  சேலம் மாவட்டம் மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை, தனியார் பஸ்கள் மட்டுமின்றி பிற வாகனங்களில் பயன்படுத்துவதாக புகார்கள் வருகின்றன. இதை தவிர்க்க வேண்டும். மீறி பயன்படுத்துவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.