அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்க தடை? அது என்னோட சப்ஜெக்ட் இல்ல - அமைச்சர் மழுப்பல்
அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்கக்கூடாது என்ற அறிவிப்புக்கு அது என்னுடைய சப்ஜெக்ட் கிடையாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் மழுப்பலாக பதில் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூரில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் SS சிவசங்கர் தலைமை தாங்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் ரூ.2000 நோட்டுகளை பயணிகளிடம் இருந்து வாங்கக்கூடாது என்று அரசு பேருந்து, நடத்துனர் மற்றும் கிளை மேலாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுகளைப் பெற்றால் அதற்கு நடத்துனர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அது அதிகாரிகள் சப்ஜெக்ட், இது என்னுடைய சப்ஜெக்ட் இல்லை என்று மழுப்பலாக கூறினார்.