மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் உலா வந்த இரண்டு காட்டு யானைகளால் அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி குன்னூர், மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வருவது வழக்கம். அந்த வகையில் குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை 12வது மற்றும் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே இரண்டு ஆண் காட்டு யானைகள் சாலையோரம் நிற்பதாக குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் உத்தரவின் படி வனத்துறையினர் காட்டு யானைகள் சாலைக்கு வராதபடி கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காட்டு யானைகளை கண்டால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் குன்னூர் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.