கனமழை எதிரொலி; கோத்தகிரி அருகே கடும் நிலச்சரிவு - 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு
கோத்தகிரி அருகே கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நகரத்திற்கு வர முடியாமல் தவிப்பு.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கீழ் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், கீழ் கோத்தகிரி பகுதியில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான கீழ் கோத்தகிரி அருகே அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள பழங்குடியின கிராமமான கரிக்கையூர் பகுதிக்கு செல்ல கூடிய சாலையில் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட 30 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தேயிலை செடிகள் கிட்டத்தட்ட 700 மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்ட நிலையில், நல் வாய்ப்பாக தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் தோட்ட தொழிலாளர்கள் யாரும் இல்லததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஆனால் கரிக்கையூர் மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட பழங்குடியினர் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியிடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அவசர தேவைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் தங்கள் கிராமப் பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு 15 கிலோமீட்டர் சுற்றி வாடகை வாகனம் மூலம் 1000 முதல் 1500 ரூபாய் செலுத்தி செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆகவே மாவட்ட நிர்வாகம் சாலை வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.