நீலகிரி யானைகள் முகாமில் குட்டி யானைகளுக்கு கும்கி பயிற்சி வழங்கும் வன அதிகாரிகள்
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் இளம் வயது குட்டி யானைகளுக்கு கும்கி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், மைசூர் சாலையில் உள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள கும்கி யானைகளுக்கு வயது மூப்பு காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இதனால் புதிய கும்கி யானைகளை தயார் படுத்த வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன் படி முகாமில் உள்ள இளம் வயது ஆண் யானைகள் மற்றும் குட்டி யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குட்டி யானைகளான கிருஷ்ணா, உதயன் கிரி, சங்கர், ரகு ஆகிய யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
காட்டு யானைகளை கயிறு கட்டி பிடிப்பது, காட்டு யானையை தப்பாமல் இருக்க சங்கிலி கயிறு மிதிப்பது, பிடிக்கப்படும் யானையை லாரியில் ஏற்றுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.