நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
நீலகிரியில் இருந்து கோவை நோ்கி மஞ்சூர், கெத்தை பாதையில் வந்த அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டத்தால் பேருந்தில் பயணித்த மக்கள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்ல மூன்றாவது வழித்தடமாக மஞ்சூர் - கெத்தை சாலை உள்ளது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் இப்பாதையில் யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இவ்வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் குட்டியுடன் யானை கூட்டம் ஒன்று மஞ்சூர் கெத்தை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. அவை அவ்வப்போது சாலையில் உலா வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை யானை கூட்டம் சாலையில் உலா வந்துள்ளது. நீண்ட நேரம் சாலையில் நடந்து பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் யானை கூட்டத்தை ஆச்சரியத்துடன் கண்டு சென்றனர். யானைகள் தொடர்ந்து சாலையில் உலா வரும் என்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.