நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
நீலகிரி மாவட்டம் அருவங்காடு அருகே தனியார் தொழிற்சாலைக்குள் திடீரென 4 சிறுத்தைகள் ஒரே நேரத்தில் புகுந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தொழிற்சாலை பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தை பொருத்த அளவில் 65% வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாகும். இங்கு காட்டெருமைகள், புலி, சிறுத்தை, கரடிகள் என அனைத்து வகையான விலங்குகளும் அவ்வப்போது நகரப் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் வலம் வருவது வழக்கம் தான்.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்தில் நான்கு சிறுத்தைகள் இரவு நேரத்தில் உள்ளே புகுந்துள்ளன. அதனை தொழிலாளர்கள் சிலர் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாதுகாப்பு நிறைந்த வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் சிறுத்தை நுழைந்தது தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் கடந்த வாரம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி பகுதியில் இரவு வேளையில் கரடி நடமாடியது குறிப்பிடத்தக்கது.