நாகையில் பாதசாரி உயிரிழந்த விவகாரம்; சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை அதிகாரிகள் பிடித்துச் சென்றதால் பரபரப்பு
நாகையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் மாட்டின் உரிமையாளர்களுக்கும், நகராட்சி பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நாகை அடுத்த கோட்டைவாசல்படி மெயின் ரோட்டில் கடந்த வாரம் மாடு முட்டி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் சாலையில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் இன்று சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மாடுகளை நாகை நகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை கொண்டு மாடுகளை பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாகை பப்ளிக் ஆபிஸ் ரோடு, வெளிப்பாளையம், பெரிய கடைத்தெரு, நாகூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாகை - நாகூர் தேசிய நெருஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். தொடர்ந்து மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை பிடித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் போலீசார் அங்கிருந்தவர்களை களைந்து செல்ல அறிவுறுத்தினர். சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் மாடுகளை திரியவிட்டால் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.