Asianet News TamilAsianet News Tamil

மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி

மயிலாடுதுறையில் விற்பனை செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் தவளை உயிருடன் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை நகராட்சி தருமபுரம் சாலையில் குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்துவரும் கிருஷ்ணா என்ற நிறுவனம் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை  மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி மிகப்பெரிய அளவில் குடிநீர் விற்பனை செய்து பிரபலமான நிறுவனமாக உள்ளது. இந்நிலையில்  மளிகை கடை ஒன்றில் பொதுமக்கள் வாங்கிய இந்த நிறுவனத்தின் தண்ணீர் கேனில் உயிருடன் தவளை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுப்புராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் குடிநீர் கேன் வாங்கப்பட்ட மளிகை கடையில் ஆய்வு மேற்கொண்டனர். வாட்டர் கேனில் தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி, காலாவதியான தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் உள்ள வாட்டர் கேனை வாங்கி விற்பனை செய்யகூடாது என்று மளிகைகடைகாரரை எச்சரித்தனர்.  தொடர்ந்து கிருஷ்ணா வாட்டர் கேன் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வின் போது அங்கு மினி லாரியில் ஏற்றப்பட்டிருந்த வாட்டர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தது.  கட்டிடத்தை ஆய்வு செய்தபோது காலி கேன்கள் உள்ள இடத்தில் தவளைகள், நத்தை, மரவட்டை இருந்தது  தெரியவந்தது. உடனடியாக நிறுவனத்தில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள சுப்புராஜ் உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ் வழங்கி அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர.  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனில் தவளை உயிருடன் இருந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories