நாகூர் தர்காவில் கந்தூரி விழா நிறைவு பெற்று கொடி இறக்கம்
நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது. விழாவில் வண்ணமிகு வானவேடிக்கைகள் முழங்க 5 மினாராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் இறக்கப்பட்டன.
நாகை மாவட்டம் நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவின் 466 -வது கந்தூரி விழா கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 1-ம் தேதி பீர் அமரவைத்தல், 2-ம் தேதி சந்தனகூடு ஊர்வலம், 3-ம் தேதி ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி, 4-ம் தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இந்த நிலையில் 14 நாட்கள் நடைபெற்ற திருவிழாவின் கடைசி நாளான நேற்று தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பிறகு 5 மினாராவில் ஒரே நேரத்தில் கொடி இறக்கப்பட்டது. வண்ணமிகு வான வேடிக்கைகள், அதிர்வேட்டுகள் முழங்க ஒரே நேரத்தில் தர்காவின் 5 மினாராக்களிலும் கொடிகள் இறக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.