Watch : நாகையில் சிக்கிய செல்போன் திருடன்! ரூ.1.20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்
நாகையில் பூட்டியிருந்த கடையின் ஷட்டரை உடைத்து செல்போன்கள் திருடப்பட்ட சம்பவத்தில், சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருடனை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து திருடிச்செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவர், வெளிப்பாளையம் காவல் நிலையிம் அருகே சொந்தமாக செல்போன் கடையை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இவர் கடந்த மார்ச் 14ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு ஷோகேஸில் அடுக்கி வைத்திருந்த செல்போன்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
உடனடியாக, இது குறித்து கணேஷ்குமார் அளித்த புகார் பேரில் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து திருடர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குமரேசன் என்ற நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாணையில் அவர் தஞ்சாவூர் மானாம்பூசாவடியை சிவன் கோவில் தேர்வைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 13 டச் போன்கள், 1 பவர் பேங் மற்றும் 1 ப்ளூடூத் என சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மீட்டனர். கைதான நபர் மீது தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.