Watch : நாகை வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை! ஊழியர்களிடம் அதிரடி விசாரணை
நாகை வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தனர்.
நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டா மாறுதல், பட்டா பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு கையூட்டு கேட்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் நாகை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். தொடர்ந்து அலுவலகத்தின் வாயில் கதவு உள்ளிட்ட அனைத்து கதவுகளையும், ஜன்னல் கதவுகளையும் உள்புறமாக பூட்டி தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள், ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். இதனால் பொதுமக்கள் யாரையும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை. களப்பணிக்காக வெளியே சென்ற வட்டாட்சியர் ராஜசேகர் அலுவலகத்திற்குள் வந்த நிலையில் அவரிடமும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுடனர்.