தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

மயிலாடுதுறையில் தனியார் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த முதியவர் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் முதியவர் பேருந்தில் இருந்து கீழே விழும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Aug 5, 2023, 9:27 AM IST | Last Updated Aug 5, 2023, 9:27 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் கடந்த மாதம் 20ம் தேதி தனியார் பேருந்து ஆடுதுறையில் இருந்து குத்தாலம் மார்க்கமாக மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் படிக்கட்டிற்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு 70 வயது முதியவர் பயணம் செய்துள்ளார். 

பேருந்து நிறுத்தம் நெருங்கிய நிலையில் இறங்குவதற்காக இருக்கையில் இருந்து முதியவர் எழுந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து முதியவர் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

யானைகள் முகாம்: இன்றும் சுருளி அருவியில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இந்த நிலையில் முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குத்தாலம் காவல்துறையினர் அஜாக்கிரதையாக மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இறந்த நபர் எந்த ஊர் மற்றும் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் தற்போது வரை தெரியவில்லை. காவல் துறையினர் இறந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது முதியவர் பேருந்தில் இருந்து தவறி விழும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories