மதுரை மத்திய சிறையில் 22 கைதிகள் திடீர் விடுதலை ஏன்?
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில், சிறைவாசம் அனுபவித்து வரும் நீண்ட நாள் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரக் குறிப்புகளை உடனடியாக அனுப்பி வைக்கும்படி, சிறைத்துறை டி.ஜி.பி. அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்திருந்தது.
அதன் அடிப்படையில் மதுரை மத்திய ஜெயிலில் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலனை செய்து மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையானவர்கள் ஒவ்வொருவருக்கும் மரக்கன்றுகள் கொடுத்து சிறைத் துறை அதிகாரிகள் அவர்களை வழி அனுப்பி வைத்தனர். நீண்ட நாட்கள் கழித்து சிறையிலிருந்து வெளிவந்தவர்களை அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றனர்.