மதுரையில் ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்
மதுரை மாவட்டத்தில் வளர்ப்பு ஜல்லிக்கட்டு காளை ஒன்று உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கி அந்த காளைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அருகே கோவில் பாப்பாகுடி எனும் கிராமத்தில் திடீரென உடல் நலக்குறைவால் காலமான ஜல்லிக்கட்டு காளை ராமுவுக்கு ஊரே துக்கம் அனுசரித்தது. மனிதர்களுக்கு செய்வதைப் போன்ற தாரை தப்பட்டைகளுடன் இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்ற பொதுமக்கள்.
மதுரை மாநகருக்கு உட்பட்ட கரிசல்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடுபிடி வீரர் தீபக். இவர் 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது காளைகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மட்டுமின்றி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளன.
தான் வளர்த்து வரும் அனைத்து காளைகளையும் தன் உடன் பிறந்த தம்பிகளாக கருதி போற்றி வரும் தீபக்கின் காளையான ராமு நேற்று பிற்பகல் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தது. இந்நிலையில் ராமு உயிர் இழந்த தகவலை ஊரில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தெரிவித்து, அவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தகவல் கேள்விப்பட்டு மதுரை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களைச் சார்ந்த மாடுபிடி வீரர்களும், காளை வளர்ப்போரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.