மதுரைக்கும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் முதல்வருக்கு உதயகுமார் கோரிக்கை
மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக உயர்த்திட எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசு விரைவுப்படுத்துமா, கிடப்பில் போடப்படுமா.? என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை சர்வதேச விமான நிலையமாக மாற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உருவாக்கிட மத்திய அரசு 550 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது, அந்த விமான நிலைய விரிவாக்கத்திற்கு 633.17 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் ஆட்சியில், அயன்பாப்பாக்குடி, குசவன்குண்டு, பாப்பானோடை, ராமன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் என 528.65 நிலங்களை முழுமையாக ஒப்படைக்கப்பட்டது,
குறிப்பாக 90 சதவீதம் அளவில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 104.52 ஏக்கர் நிலங்களை நிலங்களை திமுக அரசு துரிதப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா காலகட்டத்தின் போது நிலம் எடுக்கும் பணி தாமதமானது, தற்போது சகஜமாக நிலை திரும்பிவிட்டது, மத்திய அரசுக்கு எதிர்பார்க்கும் வகையில் திமுக அரசு ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும். சென்னையில் புதிதாக உருவாக்கப்படும் விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறை மதுரைக்கு காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.