புயல் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் 60 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்ததால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் இன்று விடுமுறை அளித்துள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பெரியார் நகர் பகுதியில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான ராட்சத மரம் ஒன்று முறிந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்கின்ற தனியார் நிறுவனத்தின் பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனையடுத்து காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.