திடீரென கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து; ஆவேசமடைந்த வியாபாரிகள், பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று சாலையோரக் கடையில் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதி மிகவும் வாகன நெருக்கம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் பகுதிக்கு இயக்கப்படுகிறது. இந்தநிலையில் திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது, அரசு பேருந்து செங்கல்பட்டு அடுத்துள்ள வல்லம் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இயங்கி வந்த ஹார்டுவேர்ஸ் கடை மீது மோதி, விபத்துக்குள்ளானது. கடை மீது பேருந்து மோதியதால் கடையில் இருந்த பல பொருட்கள் சேதம் அடைந்தன.
விபத்து நிகழ்வதற்கு முன்பாக பேருந்து சற்று வேகம் குறைந்ததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கடை சேதம் அடைந்திருந்தாலும் உள்ளே சென்ற பயணிகளுக்கு, எந்தவித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் மீது தவறு இருப்பதாக கூறி பயணிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.