காஞ்சிபுரத்தில் மாடு மீது மோதி ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு; 2 மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
காஞ்சிபுரம் அருகே மாடு மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தால் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரை முதல் திருமால்பூர், செங்கல்பட்டு - அரக்கோணம் - செங்கல்பட்டு, பாண்டிச்சேரி - திருப்பதி உள்ளிட்ட ரயில்கள் காஞ்சிபுரம் வழியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று மாலை சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில் காஞ்சிபுரத்தை அடுத்த பெரிய கரும்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தை கடந்த மாடு மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது. மாட்டின் கால்கள் ரயில் சக்கரத்தில் சிக்கிக் கொண்டதால் ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாமல் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ரயிலேவே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் வந்து மாடு அகற்றப்பட்டு தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டு சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.