மகா சிவராத்திரி; நள்ளிரவில் சுடுகாட்டில் நடத்தப்பட்ட மயானபூஜை - எலும்புகளை வாயில் கவ்வி ஆக்ரோஷ வழிபாடு

சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

First Published Mar 9, 2024, 10:43 AM IST | Last Updated Mar 9, 2024, 10:43 AM IST

கோவை மாவட்டம் சொக்கம்புதூரில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கபட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டன. கையில் அரிவாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களுடன் மயான பூசையில் ஈடுபடும் பூசாரி மாசாணியம்மனின் களி மண் உருவத்தை சுற்றி ஆக்ரோசமாக நடனமாடியபடி பூசை செய்தார்.

இதைதொடர்ந்து மாசாணியம்மனின் இருதயத்தில் இருந்து கைபிடி மண்ணை எடுத்து, அதில் இருந்து மனித எலும்புகளை எடுத்து வாயில் கடித்தபடி மயான கொள்ளை நிகழ்ச்சியில் பூசாரி ஈடுபட பக்தர்கள் ஆரவாரத்துடன் மாயன கொள்ளை நிகழ்ச்சியை நள்ளிரவில் கண்டு பரவசமடைந்தனர். பின்பு மாசாணியம்மனின் உருவத்தின் இருதய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சொக்கம் புதூரில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு மண்ணை வைத்து பூஜை செய்தனர்.

நள்ளிரவில் நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது சொக்கம்புதூர் பகுதி மக்களின் நம்பிக்கை. இதே போன்று கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

Video Top Stories