Asianet News TamilAsianet News Tamil

ரூ.100 கட்டணத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கே சவால் விடும் புதுச்சேரி எலி ஜோதிடர்

கிளி வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவையில் ஆங்காங்கே எலி ஜோதிடம் பிரபலமடைந்து வருகிறது.

மனிதர்களுக்கு எப்போதெல்லாம் கஷ்டங்கள் வருகிறதோ அப்போது எல்லாம் ஆன்மீகத்தையும் ஜோதிடத்தையும் நாடுவது என்பது இயல்பான ஒன்றாகவே உள்ளது. தற்போது பல்வேறு துறைகளில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் போது கிளி ஜோசியம் பார்ப்பவர்கள் கூட காலத்துக்கு ஏற்றார் போல் எலியைவைத்து ஜோசியம் பார்த்து வருகின்றனர். கிளியை வைத்த ஜோதிடம் பார்த்தால் 50 ரூபாய் ஆனால் எலியை வைத்து ஜோதிடம் பார்க்க  நூறு ரூபாய் கட்டணத்தில் எலி ஜோசியம் பார்த்து வருகிறார் முத்து என்பவர்.

தமிழகத்தைச் சேர்ந்த முத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரிக்கு தனது குடும்பத்துடன் வந்தார். இவர் நகரப் பகுதியில் ஒரு சிறிய வீட்டை வாடகை எடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். கையில் சிறிய பெட்டியை வைத்துக்கொண்டு அதில் இரண்டு கிளிகளுடன் ஜோசியம் பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார். மேலும் கடற்கரை சாலை, அரசு மருத்துவமனை, பாரதி பூங்கா, சட்டப்பேரவை அலுவலகம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்து வாக்கு சொல்லி வந்தார்.

புதுச்சேரிக்கு வரும் மக்கள் இவருடன் அதிக பழக்கம் ஏற்பட்டதால் கடற்கரைக்கும், பூங்காவுக்கும் வரும்போது எல்லாம் இவரிடம் கிளி ஜோசியம் பார்த்து தான் செல்வார்கள். இவரும் கிளி ஜோசியம் பார்ப்பவர்களுக்கு மனதுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகளை சொல்லி அனுப்புவார். இந்த நிலையில் கிளி சோசியம் பார்த்து வந்த முத்து திடீரென்று கிளி இல்லாமல் கிளிக்கு பதிலாக எலியை  வைத்து எலி ஜோசியம் பார்த்து வருகிறார்.

கிளி ஜோசியம் பார்த்தாலும் எலி சோசியம் பார்த்தாலும் அவரது வாடிக்கையாளர்கள் முத்துவின் வாக்கு சுத்தமாக இருக்கும் என நம்பி அவரிடம் தொடர்ந்து ஜோசியம் வருகின்றனர். கிளி ஜோசியம் பார்த்த முத்து திடீரென எலியை வைத்து ஜோதிடம் பார்ப்பது ஏன் என நாமும் அவரிடம் விசாரித்தோம். அப்போது அவர்.. கிளியை வைத்து ஜோசியம் பார்த்தால் நிறைய சட்ட சிக்கல்கள் இருக்கிறது. கிளியை வளர்க்கக்கூடாது என்கிறார்கள் மேலும் அதிகாரிகள் பார்த்தால் அபராதம் விதிப்பார்கள்.

ஆனால் சம்பாதிப்பது சொற்பளவுதான் தான் எப்படி ஃபைன் கட்ட முடியும் என்று நினைத்துதான் கிளிக்கு பதிலாக எலியை வைத்து ஜோதிடம் பார்த்து வருவதாக தெரிவித்தார். மேலும் தன்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு மனசுக்கு  நிம்மதியாக நான்கு வார்த்தைகள் பேசும் போது அவர்களும் அதை கனிவுடன் கேட்பதாக கூறினார். அப்போது அங்கு வந்த ஒரு வாடிக்கையாளர் பெயரை சொல்லி எலியிடம் சீட்டு எடுக்க சொல்கிறார் அப்போது கேரட் கொடுத்து எலியை அழைக்க உடனே எலி வந்து சீட்டை எடுத்து கொடுத்து விட்டு செல்கிறது.

கிளி ஜோசத்திற்கு பதிலாக எலியை வைத்து ஜோசியம் பார்க்கும் முத்துவின் திறமையை அந்த வழியாக செல்பவர்கள் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்த்தபடி செல்கின்றனர். நீங்களும் புதுச்சேரிக்கு வந்தால் கண்டிப்பாக கடற்கரை சாலையில் அமர்ந்திருக்கும் முத்துவிடம் எலி ஜோசியம் பாருங்கள் அவரது வாக்கு பலிதமாகும் மனதுக்கு நிம்மதியாக நான்கு ஆறுதலான வார்த்தைகளை கூறுவார்.

Video Top Stories