பாஜக எம்எல்ஏ.வை ரவுண்டு கட்டிய நாம் தமிழர் கட்சியினர்; அடுக்கடுக்கான கேள்விகளால் எம்எல்ஏ திணறல்
புதுச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு விளக்கம் கேட்டதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கல்யாணசுந்தரம். இவர் இன்று காலாப்பட்டு தொகுதியில் தொகுதி வளர்ச்சி பணிக்காக அடிக்கல் நாட்டு விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு ஒன்று கூடிய நாம் தமிழர் கட்சியினர் என்ன பணி செய்வதற்காக இங்கு அடிக்கல் நாட்டுகிறார்கள் என்று கேட்டனர்.
அதற்கு எம்எல்ஏவும் கடற்கரை ஓரம் கற்கள் கொட்டுவதற்கான பணி என்று பதிலளித்தார். அப்படி என்றால் இந்த இடத்தில் வரவுள்ள வளர்ச்சிப் பணிக்கான வரைபடத்தை காட்டுங்கள் என்று கேட்டனர். உங்களிடம் எதற்காக வரைபடத்தை காட்ட வேண்டும் என்று எம் எல் ஏ கேட்டார்.
அதற்கு நாம் தமிழர் கட்சியினர் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலமாக கடல் அரிப்பால் வீடுகள் பாதிக்கப்படுகிறது என்று கூறி தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு கற்கள் கொட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டுவது என்பது எதற்காக என்று கேள்வி எழுப்பினர்.
இதனால் ஆவேசமடைந்த அவர்கள் எம்எல்ஏ வை தொகுதி பக்கமே பார்க்க முடியல என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கினர். இதனால் அதிர்ச்சடைந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடு பட, நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை சட்டமன்ற உறுப்பினரை கேட்கிறோம் என்றதும் பதிலுக்கு பேசிய சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் நேரடியாக வரியா பார்த்துக்கலாம் என்று கேட்க அதற்கு அவர்களும் வாங்க பார்த்துக்கலாம் என்று சொல்ல பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வீடியோ தற்போது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற உறுப்பினரே மாற்றுக் கட்சியினரிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.