Asianet News TamilAsianet News Tamil

உருவ கேலியோ, விமர்சனமோ எதுவாக இருந்தாலும் அசரக்கூடாது - மகளிர் தினவிழாவில் தமிழிசை பேச்சு

பெண்கள் என்றால் எளிதில் உருவ கேலியும், விமர்சனமும் செய்கின்றனர். ஆனால், எதுவாக இருந்தாலும் அசராமல் இருப்பது தான் பெண்களின் பலம் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில்  சர்வதேச மகளிர் தின விழா வில்லியனூரில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி  ஆகியோர் சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த புதுச்சேரியை சேர்ந்த மகளிருக்கு "மகளிர் சாதனையாளர் விருது" வழங்கினார்கள்.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், பெண்கள் இல்லையென்றால் வீட்டிலும், நாட்டிலும் ஒன்றும் நடக்காது. இன்று விழாவிற்கு பல பெண்கள் வந்து விட்டதால் வீட்டில் அனைவரும் பட்டினியா என தெரியவில்லை. பெண்களுக்கு வெளியில் நிறைய வேலை உள்ளதால் ஆண்களும் சமையல் செய்ய கற்று கொள்ளுங்கள்.

நாம் எவ்வளவு பேசினாலும் பெண் முதல்வராகவோ, அமைச்சராகவோ, தலைவராகவோ பொது வாழ்வில் இருப்பதும் கஷ்டம் தான். ஆனால் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அந்த சவால்களை சமாளிப்பது தான் பெண்களுக்கு இறைவன் கொடுத்துள்ள மிகப்பெரிய பலம். பெண்கள் என்றால் உருவ கேலி, விமர்சனங்கள் செய்வார்கள். ஆனால் எது செய்தாலும் அசரவே மாட்டேன் என்று இருப்பது தான் பெண்களுக்கான பலமாக இருக்க முடியும். 

நான் ஆண்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் பெண்களின் முயற்சிகளை பாராட்டுங்கள். பக்க பலமாக இருங்கள். பெண்கள் என்றாலே சவால்கள் இருக்கும். ஆகவே எதற்காகவும் பெண்கள் உங்களுடைய மகிழ்ச்சியையும், உடல் நலத்தையும் தொலைக்காதீர்கள். 

நமக்கு உரிமை இருப்பது போன்று பெண் குழந்தைகளையும் உரிமை கொடுத்து வளருங்கள். அதே நேரத்தில் ஆண் குழந்தைகளுக்கும் சொல்லி, கண்டித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் இந்த சமுதாயம் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.

Video Top Stories