Asianet News TamilAsianet News Tamil

புதுவையில் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு தேவை - அதிமுக கோரிக்கை

புதுச்சேரி ஆன்மீக பூமி என்பதால் கோவில்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரியில் மழைக்காலத்தில் பரவி வரும் டெங்கு மற்றும் காய்ச்சல் நோய்களை தடுப்பதற்கு புதுச்சேரி அரசு தவறிவிட்டது. இதனால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மழை பெய்யும் சூழல் இருப்பதால் போர்க்கால அடிப்படையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு எடுக்க வேண்டும். 

புதுச்சேரியில் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு வருவதால் பேருந்து நிலையம் ஏ.எப்.டி. மைதானத்திற்கு மாற்றப்பட உள்ளது. ஏற்கனவே கடலூர் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, மேலும் நீதிமன்றம், ரயில்வே கேட் ஆகியவை இருப்பதால் ஏ.எப்.டி மைதானத்திற்கு பேருந்து நிலையத்தை மாற்றக்கூடாது. 

புதுச்சேரி ஆன்மீக பூமி என்பதால்  புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் அரைகுறை ஆடையுடன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகிறார்கள். எனவே கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதுச்சேரி அரசு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அன்பழகன் கேட்டுக் கொண்டார்.

Video Top Stories