புதுவை மயான கொள்ளை விழா; 1 கி.மீ. நடந்து சென்று தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் பங்கேற்க வந்த முதல்வரின் கார் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டதால் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு முதல்வர் ரங்கசாமி நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 128-ம் ஆண்டு மயான கொள்ளை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம் உட்பட அண்டை மாநில மக்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு மயான கொள்ளையில் காய்கறிகள், பழங்கள், நவதானியங்கள் உள்ளிட்டவற்றை வாரி இறைத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.
மேலும் மயான கொள்ளையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குழுமியிருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மயான கொள்ளையில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ரங்கசாமி காரில் வந்தபோது அவரது கார் பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டது. ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் காரை அங்கேயே நிறுத்திவிட்டு இறங்கிய முதலமைச்சர் ரங்கசாமி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அளவிற்கு கோவிலுக்கு நடந்தே சென்றார்.
அப்போது அவரை கண்ட மயான கொள்ளைக்கு வந்தவர்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் புகைப்படம், செல்பி எடுத்தும் கைகுலுக்கியும் மகிழ்ந்தனர். முதலமைச்சர் ரங்கசாமியும் சற்றும் சளைக்காமல் வழிநெடுக நின்று பொதுமக்களுக்கும், சிறுவர்களுக்கும் இன்முகத்துடன் பதில் அளித்தவாறு சென்று அங்காளம்மனை தரிசனம் செய்தார். அதேபோன்று திரும்பி வரும் பொழுதும் அவரை மக்கள் விடாமல் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.